திங்கள், 4 மே, 2009

தவத்திரு.மருதாசல அடிகளார்

திருக்கயிலாய மரபு மெய்கண்டார் வழி திருப்பேரூராதீனம் இளைய பட்டமாகவும்,உதகை காந்தள் அருள்மிகு ஆலமர் செல்வர் திருமடத்தின் ஆறாவது குருமகா சந்நிதானமாகவும் அருள்பாலிக்கும் கயிலை மாமணி தவத்திரு.மருதாசல அடிகளார் கோவை அன்னூர் அருகே உள்ள முதலிபாளையம் எனும் ஊரில் திரு.சி.வேலுசாமி கவுண்டர் திருமதி.சுப்பாத்தாள் அம்மையாரின் திருமகவாகவும்,ஒருமகவாகவும் திருவள்ளுவர் ஆண்டு 1992 தை 12ஆம் நாள் 1961 ஆம் ஆண்டு சனவரி 25ஆம் நாள் பிறந்தவர்.
கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கிய இவர் எம்.ஏ.,( தமிழ் ) எம்.ஏ ( கூட்டுறவு )எம்.பில் ( ஆய்வியல் நிறைஞர் ),பி..ஜி..எல்.( சட்டம் ) மற்றும் படிப்புகளை கற்றுத் தேர்ந்தார்.சாந்தலிங்கரின் மெய்யியல் கோட்பாடுகள் எனும் தலைப்பில் இவர் செய்த ஆய்வுக்காக பாரதியார் பல்கலைக்கழகம் இவருக்கு முனைவர் ( டாக்டரேட் ) பட்டம் வழங்கிச் சிறப்பித்தது.
தேசிய அளவிலும் ,வெளிநாடுகளிலும் நடந்த கல்வி,கலாச்சார,சமய கருத்தரங்குகளில் கலந்து கொண்டு தமிழ்மொழி மற்றும் தமிழக மக்களின் தொன்மை,சமயம்,கலாச்சாரம்,பண்பாடு போன்றவற்றை வெளிப்படுத்தி உள்ளார்.இப்பணிக்காக இவர் நேபாளம்,சீனா,துபாய்,பிரான்சு,செர்மனி,ஆலந்து,பெல்சியம்,மொரிசியஸ்,இங்கிலாந்து, அமெரிக்க நாடுகளில் உள்ள மக்களின் அன்பு அழைப்பை ஏற்று அங்கு சென்று உரையாற்றி உள்ளார்.
அடிகள் பெருந்தகை மேற்குலக சைவ கருத்தரங்கை மூன்றுமுறை வழி நடத்தியதுடன் உலகின் வெவ்வேறு பகுதிகளில் நடந்த சைவ கருத்தரங்குகளிலும் பங்கேற்றுள்ளார்.
கேந்திரிய மார்க் தர்சக்,ஆச்சார்ய சபா,தர்மா ரட்சா மஞ்ச், ராமசேது பாலக்குழு,ராம சென்ம பூமிக்குழு போன்ற அமைப்புகளில் உறுப்பினராகவும்,இந்து துறவியர் பேரவையின் இணைச்செயலாளராகவும்,தமிழக புலவர் குழுவின் உறுப்பினராகவும் உள்ளார்.விசுவ இந்து பரிசத்தின் மூலம் இலங்கைக்கு சென்ற ஆறுபேர் கொண்ட அமைதிக்குழுவிலும் அங்கம் வகித்து உள்ளார்.
பாரதத்தில் உள்ள பல புனித இடங்களுக்கும் பக்தர்களை அழைத்துச் சென்றது மட்டுமல்லாமல்,புனிதத் திருமலையாம் கயிலைக்கு மூன்றுமுறை சென்று வந்துள்ளார்.
பாரதியார் பல்கலைக்கழகத்தின் ஆட்சிப்பேரவை ( செனட் ) உறுப்பினராகவும் இருந்திருக்கிறார்.மக்கள் சேவையே மகேசன் சேவை எனும் அடிப்படையில் இதுவரை 18 முறை குருதிக்கொடை வழங்கியுள்ளார்.
தமிழ்முறையில் குடமுழுக்கை செய்யும் ஊர்களுக்குச் சென்று அவர்களை ஊக்குவித்து அருளாசி வழங்கி வருகிறார்.
போற்றி ஓம் நமசிவாய

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக