வியாழன், 14 ஜனவரி, 2010

பேரூரடிகளாரின் தமிழர் திருநாள் வாழ்த்து

தமிழர் திருநாள் வாழ்த்து
சங்ககால வாழ்வியலைச் சார்ந்து புதுமைபல வளர
மங்கும் பொய்மைகொலை நெறிகள் மாய்த்துக் கொடுமைதமை நீக்கி
எங்கும் எதிலும் குறள்நெறியே ஏற்றுப்போற்றும் வளம்சுமந்து
பொங்கும் அன்பால் நேசித்துப்பொங்கல் நாளை வரவேற்போம்.

உலகம் போற்ற செம்மொழியின் உயர்வைக்கூறி நல்லறிஞர்
பலரும் இணைந்தே உலகத்தார்பற்றி நினைக்கத் தமிழரசு
நிலவும் சூழலால் எடுத்து நீடும் மைய அரசு ஏற்கக்
கலந்த புத்தாண்டினிய பொங்கல் கனிவாய் ஏற்போம் வாழ்த்துக்கள்.

ஏற்றத்தாழ்வு நிலை பலவும் எங்கும் எதிலும் சேர்நிலையை
மாற்ற அரசை வலியுறுத்தி வறுமை பிணிகள் அகன்றிடவே
சாற்றும் சான்றோர் நட்புறவு தழைத்துத் தெய்வத் தமிழதனால்
போற்றி மக்கள் நல்வாழ்வு பொங்கல் திருநாள் பொழியட்டும்.

வருங்காலத்து தலைமுறைகள் வளஞ்சேர் கல்வி அறநெறிகள்
பொருந்து தொழில்கள் பண்பாடு புகட்டும் பாடத்திட்டத்தின்
அருமைத் தமிழே முதலிடத்தில் அமையும் நிலையைப்பெற வேண்டும்
உருகும் தமிழால் வழிபட்டு உயர வருக தைப்பொங்கல்
அன்புள்ள
சாந்தலிங்க இராமசாமி அடிகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக