செவ்வாய், 3 மார்ச், 2009

திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா



அருள்நலம் சான்றோரே,
வளம்சேர் புகழ்பெற்ற கொங்குவள நாட்டில்'' மீ கொங்கில் அணி காஞ்சிவாய்ப் பேரூர்''எனப்போற்றப்படும் திருத்தலம் திருப்பேரூர்.மேலைச்சிதம்பரம்,பிறவாநெறி என்னும் பெயர்களுடன் விளங்குவது.
பட்டிமுனி,கோமுனி,சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு இறைவன் அருட்காட்சி நல்கிய திருத்தலம்.இத்தகைய சிறப்புப்பெற்ற திருத்தலத்தில் 17 ஆம் நூற்றாண்டில் சீலத்தவர் போற்றத் திருமடம் அமைத்து அடியவர்களுக்கு ஞான நெறி காட்டியவர் திருக்கயிலாய மரபு மெய்கண்டார் வழிவழி திருப்பேரூராதீன ஆதிகுரு முதல்வர் அருள்மிகு சாந்தலிங்க அடிகளார் ஆவார்.உலகம் உய்யும் பொருட்டு கொலை மறுத்தல்,வைராக்கிய சதகம்,வைராக்கிய தீபம்,அவிரோத உந்தியார் என்னும் நான்கு அருள்நூல்களை அருளிச்செய்தார்.அத்தகைய பெருமானுக்குச் சிறப்பான முறையில் திருக்கோயில்,மண்டபம்,இராச கோபுரம் அமைத்ததோடு அருள்மிகு அம்பலவாணப் பெருமானுக்கும் திருக்கோயில் எழுப்பப் பட்டது.திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா 1973 ஆம் ஆண்டு சிறப்பாக நடை பெற்றது.அதைத் தொடர்ந்து 2வது,3ஆவது திருக்குட நன்னீராட்டுப் பெருவிழாக்கள் செய்யப்பட்டன.அம்பலவாணப் பெருமானின் திருவருளாலும் குருவருளாலும் அன்பர்களின் ஒத்துழைப்பாலும் திருக்கோயில் திருப்பணிகள் செய்யப்பட்டு வண்ணம் தீட்டிப் பொலிவூட்டப்பட்டுள்ளது.
நிகழும் திருவள்ளுவராண்டு 2040 சர்வதாரி ஆண்டு மாசித்திங்கள் 24 ஆம் நாள் ( 08.03.2009 ) ஞாயிற்றுக்கிழமை பன்னிரெண்டாம் வளர்பிறையும்,பூச உடுவும் இடப ஓரையும் கூடிய நன்னாளில் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா நடைபெற உள்ளது.இதனையொட்டி ஆறு கால வேள்வி வழிபாடு,கல்விநிலையங்களின் ஆண்டுவிழாக்கள்,குருபூசை விழா,சத்வித்யா சன்மார்க்க சங்க 93ஆம் ஆண்டுவிழா,கருத்தரங்குகள்,நூல் வெளியீட்டு நிகழ்வுகள் நடைபெற உள்ளன.அன்பர்கள் அனைவரும் இவ்வினிய விழாக்களில்
பங்குகொண்டு அருள்மிகு அம்பலவாணப் பெருமான் தண்ணருளும் அருள்மிகு சாந்தலிங்கப் பெருமான் திருவருளும் குருவருளும் பெற அன்புடன் அழைக்கின்றோம்.
வேண்டும் தங்களன்பு
சாந்தலிங்க இராமசாமி அடிகள்
பேரூராதீனம்,பேரூர்
கோவை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக